Wednesday, January 14, 2009

தை

"தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்றான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப் பால் பொங்கத் தொடங்குகிறது தை.... எல்லா ஒடுக்கு முறைகளையும் மூடுதிரைகளையும் கடந்து ஒடுக்கப்பட்ட சாதியின் குரலும் ஒடுக்கப்பட்ட பெண்ணியக் குரலும் இன்றைய கவிதையின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், தலித்தினம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த் தேசியம் சார்ந்து எழும் இன்றைய காலத்தின் குரலைப் பதிவு செய்வதற்காகவே வருகிறது தை. தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருகிற கவிஞர்களை உலகத் தமிழர்களுக்கெல்லாம் தை அறிமுகப்படுத்தும். மறைக்கப்படும் இலக்கிய வரலாற்றை நேர்ப்படுத்தும் இலக்கிய நேர்மையோடு ஒரு முழுமையான கவிதை இதழாகத் தொடரும்... புதிதாக எழுத வருகிறவர்களுக்கும் புரிதலோடு எழுதுகிறவர்களுக்கும் இடையில் ஒரு தமிழ்ப்பாலமாய் தை இருக்கும். வாருங்கள் கை கோர்த்து நடப்போம்". என்கிற அறைகூவலுடன் ஜனவரி 2006இல் வெளிவந்திருக்கிறது 'தை' - கவிதைக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர், கவிஞர் அறிவுமதி. இளம் கவிஞர்கள், மூத்த கவிஞர்கள், திரைப்பட கவிஞர்கள், வெளிநாட்டு கவிஞர்கள் என அனைத்து தரப்பினரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. கபிலன், கோசின்ரா, இந்திரன், அறிவுமதி, அழகியபெரியவன், மீனாட்சி, அழகுநிலா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், சிற்பி, பச்சியப்பன், தமிழச்சி, இளம்பிறை, இன்குலாப், வே.ராமசாமி, பாரிகபிலன் உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரது கவிதைகளும் வெளிநாட்டுத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளும் நாடு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

மலேசியக் கவிஞர்கள் பா.இராமு, அருண், பூங்குழலி வீரன், சிங்கப்பூர் கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோ க.து.மு.இக்பால், இளங்கோவன், கடைக்கவிஞர்கள் ஜி.பி.இராசரத்தினம், ஜம்பண்ணா, அமரச்சிந்தா, ஈழத்துக் கவிஞர்கள் சித்தாந்தன், சு.வில்வரத்தினம், நளாயினி தாம¨Ãச்செல்வன், கருணாகரன், செல்வம், துபாய் கவிஞர்கள் கவிமதி, இசாக் என உலகத் தமிழ்க கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி தை வெளிவந்திருக்கிறது. ஒரு சில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் வெளிவந்துள்ளன. வழ வழ தாளில் அழகிய கருப்பு வெள்ளை படங்களுடன் கவிஞர்களின் புகைப்படத்துடனும் குறிப்புகளுடனும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது 'தை'யின் சிறப்பம்சமாகும் எனலாம்.

நன்கொடை - ரூ.20.00.

முகவரி :
அறிவுமதி,
189 அபிபுல்லா சாலை,
தியாகராய நகர், சென்னை - 17.
போன் - ௯௪௪௪௨௮0௮௬௪

நன்றி : அந்திமழை

No comments: