Friday, April 27, 2012

கொம்பு

சிற்றிதழ் அறிமுகம் - கொம்பு

காடு எரிகிறது,  அதன் அடி வயிற்றிலிருக்கும்  பூச்சிகளும், விலங்களும் எரிகின்றன. பூக்களும்,  கனிகளும் கருக பறவைகள் ஊமையாகி சிதறி பறக்கின்றன.  குண்டடிபட்ட ஒரு காட்டெருமை ஆகாயம் நோக்கி அலறுகிறது.  வலி நரம்பில் உதிரம் கசிய கனவில் வீழ்கிறது அதன் திறந்த விழி........

என ஆரம்பிக்கும் ஆசிரியரின் கோபத்திற்கு ஏற்ற கட்டுரைகளும், கவிதைகளும் நூல் முழுக்க விரவி கிடக்கின்றன.  குறிப்பாக கணேசகுமாரனின், 'கொம்பன்' சிறுகதைகளை கூறலாம்.  மன்னர் காலத்தில் தொடங்கி நவீன காலம் வரை யானைகள் மனிதர்களிடம் சிக்கி படும் துன்பங்களை விவரித்துள்ளார். நமது காடுகளில் பல்லாயிரக்கணக்கில் சுற்றித் திரிந்த யானைகள், இன்று சில ஆயிரங்களாக குறைந்திருப்பதற்கு மனிதனே முக்கிய காரணம் என்பதை தனது கதைகள் மூலம் நிருபிக்கிறார். பசுமை இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக 'கொம்பன்'  சிறுகதைகளை தந்திருக்கிறார்.

நக்கீரன், ந.பெரியசாமி, சபரிநாதன், உள்ளிட்ட பலரின் கவிதைகள் நூலுக்கு பலம் சேர்க்கிறது. ச.முருகபூபதியின் தாம்போய் கதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன.  பழங்குடி வாழ்வை தேடி அலையும் காந்திராஜனின் நேர்காணல் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனமயமான இறை உருவங்கள் நமது தமிழ்நாட்டு குகை ஒவியங்களில் இல்லை என்றும், தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் உருவம் கூட குகை ஒவியங்களில் இல்லை என்பதும் ஆய்விற்குரியது.

நக்கீரனின், 'மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்' கட்டுரை நமது வளமிக்க மழைக் காடுகளில் பன்னாட்டு பெருங் குழுமங்களும், உள் நாட்டு பெரு முதலாளிகளும் நடத்தும் கொள்ளைகளை விரிவாக எடுத்துரைக்கிறது.  காடுகளையும், காட்டுயிர்களையும் கணக்கின்றி அழிப்பது தொடர்ந்தால், காட்டுயிர்களையும், எழிலார்ந்த மலைகள், காடுகள், ஆறு, ஏரி, போன்றவற்றை அனுபவிக்கும் கடைசி தலைமுறையாக நாம் தான் இருப்போம் என்பது உறுதி.

அந்த வகையில், சமூக அவலங்களை பேச,எதிர்க்க வந்துள்ள தரமான சிற்றிதழ் எனலாம். அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

'கொம்பின் கூர்மை இசைப்பதற்கு மட்டுல்ல'- என்ற வரிகள் உண்மை என்று நூல் வாசிப்பு உறுதிபடுத்துகிறது.


ஆசிரியர்;
வெய்யில்

தொடர்புக்கு;
எண்.11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்  -  611 001.
அலைபேசி; 9952326742.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/731-introductiontokombu

மாணவன்

மாணவன் - சிற்றிதழ் அறிமுகம்


தமிழர் நலனை முன்னிறுத்தி மாணவர்களால் மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது 'மாணவன்' எனும் அழகிய சிற்றிதழ். மாணவர்களே சமூகத்தின் வருங்கால தூண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கட்டுரைகள் யாவும் தமிழகத்தின் அவல நிலையை மக்களுக்கு உரத்து சொல்வதாக அமைந்துள்ளது.

தமிழரின் தேசிய பொருளாதாரம், வணிகம் - மார்வாடி, தெலுங்கர், மலையாளிகளால் தொடர்ந்து சூறையாடப்படுவதை சு.சா.இரா-வின் 'தமிழரின் வணிகம் தழைக்கட்டும்' கட்டுரை விவரிக்கிறது. நமக்கான தலைவர்கள் இல்லாமல் உலக வங்கிக்காகவும், அமெரிக்க நலன்களுக்காகவும் சேவை புரிகிற தலைவர்களே நமக்கு வாய்த்திருப்பது பெரும் கேடு. தமிழகத்தில் தமிழனுக்கான தலைவர்கள் இல்லாமல் இருப்பதையும், நமக்கான தலைமை, அரசியல் சக்தி தேவை என்பதை இன்றைய அரசியல் களம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

எந்தவொரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டமும் தத்துவார்த்த போராட்டமாக, சரியான தலைமையோடு இணைக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெற இயலும். முத்துக்குமார் இறப்பின் போதும், முல்லைப் பெரியாறு சிக்கலின் போதும் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் எழுச்சி, சரியான தத்துவார்த்த வழிகாட்டல் இல்லாமல், தலைமை இல்லாமல் அடங்கி போனது வரலாற்று சாட்சியாய் நம்முன் நிற்கிறது. இனியும் இந்த தவறு நேராவண்ணம் போராட்டத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக அணிவகுப்போம் என்பதை முடிகொண்டானின் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது.

'கால ஆய்வில் கயமை உடைபடும் காலம்' - என்ற த.ரெ.தமிழ்மணியின் கட்டுரை தமிழரின் வரலாற்றை ஆதாரத்துடன், ஆணித்தரமாக நிறுவுகிறார். நூலில் இடம் பெற்றுள்ள சிறுசிறு பெட்டிச் செய்திகளும், கவிதைகளும் ஆவேசத்துடன், கோபக்கனல் தெரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தமிழன் இழந்த வரலாற்றை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் 'மாணவன்' என்ற இச்சிறு சிற்றிதழ் போராட்ட களத்தில் களமாடுகிறது என்றால் அது மிகையல்ல. தமிழன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் 'மாணவன்' - சிற்றிதழை படிப்பதுடன், அதனுடைய கருத்தை பரப்பும் பரப்புரையாளனாக மாறுவது காலத்தின் அவசியம்.

மாணவன் - மாணவர்களால்... மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது...ஆசிரியர் குழு  -  ச.தமிழ்வேந்தன்,  பே.ர.பிரபாகரன்.

தொடர்புக்கு  -  இரா.க.பிரகாசு
78, அழகிரி நகர், திருவாரூர் - 610 001.
பேசி         -  98659 72207

தனி இதழ்    -  ரூ.5.00 மட்டும்.

ஆண்டு கட்டணம்  -  ரூ.60.00 மட்டும்.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/764-manavanshortmagazine

தமிழர் நாடு

தமிழர் நாடு - சிற்றிதழ் அறிமுகம்

இனம்மொழிநா டெம்முரிமை யாம்வெல்லு மட்டும்
தணியாதெம் நெஞ்சின் தழல்
-ம.லெ.தங்கப்பா


என்ற அனல் தெறிக்கும் வரிகளுடன், தமிழர் என்ற இனம் காக்கப்படாமல் மொழியை  காக்க இயலாது என்கிற தலையங்கத்தோடு, இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலையை வருத்ததுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

கூடங்குளம் இன்று சர்வதேச பார்வையை எட்டியுள்ளது என்றால் இடிந்தகரை மக்களின் அறவழியிலான, கட்டுகோப்பான போராட்டமே. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூகத்தில் ஆகப் பெரிய இயக்கங்கள் சாதிக்கவியலாத கட்டமைப்பை, ஒழுங்கமைவை சாத்தியப்படுத்தியவர் உதயகுமார் என்ற ஒற்றை மனிதர். அவருக்கு பின்னால் தமிழகம் அணி திரள வேண்டியது, ஆனால் நமது துரதிஷ்டம் இடிந்தகரை மக்கள் மட்டுமே போராடுவது போன்ற ஒரு மாயை அரசும் திட்டமிட்டு உருவாக்கிவிட்டது. அதற்கு விழிப்புணர்வற்ற மக்களும் இரையாகியுள்ளனர் என்பது தான் வேதனை. எட்டு மணி நேர மின்வெட்டை திட்டமிட்டே அரசு உருவாக்கி ஒரு பகுதி மக்களை அணுஉலைக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது இன்றைய ஆளும் வர்க்கம். இந்த மோசடியான மக்களை ஏமாற்றும் வேலையை அரசு தொடர்ந்து செய்ய இயலாது என்பதே வரலாற்று உண்மை. ஏமாறுகிற மக்கள் ஒரு நாள் கேள்வி கேட்கிற காலம் வரும், அது அரசுகள் வீழ்கின்ற காலமாக அமையும். கல்பனா சதீசு எழுதியுள்ள 'கூடங்குளம் அணுஉலை வெளிக் கொண்டு வரும் உண்மைகள்' கட்டுரை இடிந்தகரை மக்களின் உண்மை நிலையை நம்முன் நிறுத்துகிறது.

தமிழகத்திற்கு முழு உரிமையுள்ள காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்று நீர் சிக்கல்களில் நமக்கு எதிராக துரோகமிழைத்துக் கொண்டு இருக்கும் திராவிட(?) மாநிலங்களுக்கு, நெய்வேலியில் இருந்து தினம் தோறும் மின்சாரம் அனுப்பபடுகிறதே? இதை யார் கேட்பது? யார் தடுப்பது? இந்த கேள்விகளை முன்வைத்து 'பறிபோகும் நெய்வேலி மின்சாரம்' கட்டுரையில் கா.தமிழ்வேங்கை வெளிப்படுத்துகிறார். முல்லை பெரியாறு அணையை உடைக்க காத்திருக்கும் மலையாளிகள், நமது நெய்வேலி அனல் மின் நிலையத்தில் சுமார் 5,000 த்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர் (மலையாளிகளையும் சேர்த்து 8,000-த்திற்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் பணியில் உள்ளனர்.) என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

மாற்று அரசியலை உருவாக்குங்கள் என்ற தமிழருவி மணியனின் ஆசை நிறைவேற தமிழகத்தில் இன்னும் காலம் கனியவில்லை என்றே தோன்றுகிறது. பேரா.ம.லெ.தங்கப்பா அவர்களின் நேர்காணல், இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டியது. தற்கால தமிழனின் நிலையை தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் தனக்கென ஒரு நாடு தேவை என்பதை உணர வேண்டும் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தது சிறப்பாகவே இருந்தது.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் (ஏ.டி.எம்.) சேவையும், மோசடியும் என்ற கட்டுரை இதுவரை நமக்கு தெரியாத ஒரு முக்கிய செய்தியை உணர்த்தியுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் மின்சார பொய்களை ப.நற்றமிழனின் கட்டுரை விளக்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள மற்ற கட்டுரைகளும், பெட்டி செய்திகளும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.

தமிழர் நாடு தரணியெங்கும் செல்ல வேண்டும். தமிழர் நலம் பேண வேண்டும்.


ஆசிரியர்; முருகு.இராசாங்கம்

தொடர்புக்கு; எசு-9, மருத்துவர்கள் குடியிருப்பு,
பூ.சா.கோ. மருத்துவமனை வளாகம்,
பீளமேடு, கோயம்புத்தூர் - 641 004.
மின்னஞ்சல்; thamizharnadu@yahoo.com

நன்கொடை; ரூ.10.00 மட்டும்.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/777-2012-03-26-09-19-51

மின்மினி

சிற்றிதழ் அறிமுகம் - மின்மினி

மின்மினி
(ஹைக்கூவும் ஹைக்கூவைச் சார்ந்தும்)

தமிழ்ச் சூழலில் கவிதைகளுக்காக ஒரு இதழ் வருகிறது என்றால் அது மிகவும் பாராட்டிற்குரிய செயலே. கன்னிக் கோவில் இராஜா அவர்களை ஆசிரியராக கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மின்மினி' என்ற இருமாத இதழ் வருவது மகிழ்ச்சிக்குரிய விசயமே.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஹைக்கூ கவிதை போட்டிகள், புதுமுக கவிஞர்களின் கவிதைகள், வசீகரனின் கவிதை குறித்த கட்டுரை, புதுவைத் தமிழ்நெஞ்சனின் துளிப்பா இலக்கணம் என நூல் முழுக்க கவிதைகள் குறித்து  செய்திகள் விரவி கிடக்கின்றன. கவிதை நூல்கள் பற்றிய நூல் அறிமுக பகுதியும் 'படித்துப் பயனுற' பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நூலில் இடம் பெற்றுள்ள சில கவிதைகள்...

பாரமான லாரி
இறந்து போனது
ஆறு.

உறவுகளோடு
சேரவிடாமல் தடை
அழும் நதி.

என்ற ஆதம்பாக்கம் கோவிந்தனின் கனமான வரிகள் மனதை கவர்கின்றன.

ஒடாத கடிகாரம்
சோதிடர் வாக்கு
நேரம் சரியில்லை.

என்ற உதயக்குமாரன் கவிதையும்,

உயிர் கொடுத்து பாடினான்
வெட்டியான்
சடலம் முன்.

என்ற மகளிர் மட்டும் பகுதியில் இடம் பெற்றுள்ள ஈரோட்டை சேர்ந்த வளர்மதி கவிதையும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நூலில் இடம் பெற்றுள்ள பெட்டிச் செய்திகளும் சிறப்பாகவே உள்ளன. கவிதையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மேடையாக, தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக 'மின்மினி' இதழ் உள்ளது.

கவிதையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு 'மின்மினி' இதழ் ஒரு சரியான தளம் அமைத்துக் கொடுக்கிறது என்றே கூறலம்.


மின்மினி - இருமாத ஹைக்கூ இதழ்

ஆசிரியர் - கன்னிக்கோவில் இராஜா

தொடர்புக்கு - ஆசிரியர்,
மின்மினி ஹைக்கூ இதழ்,
30-8, கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராம்புரம்,
சென்னை - 600 018.
தமிழ்நாடு.
இந்தியா.

மின்னஞ்சல் - minminihaiku@gmail.com
kannikovilraja@gmail.com

விலை - தனி இதழ் ரூ.5.00
2 ஆண்டு சந்தா ரூ.60.00
5 ஆண்டு சந்தா ரூ.150.00
புரவலர் நன்கொடை ரூ.1000.00

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/786-minmini