Sunday, December 28, 2008

தமிழ்ச் சிற்றிதழ்களுக்குக் கை கொடுங்கள்!

தமிழ்ச் சிற்றிதழ்களுக்குக் கை கொடுங்கள்!
இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு இருந்த படிக்கும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. இருப்பினும் நாளேடுகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. வணிக நோக்கோடு! சிற்றேடுகளும் நூற்றுக் கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வணிக ஏடுகள் விளம்பரங்களால் கொழுத்து வருகின்றன. அவற்றுக்கு அரசு விளம்பரங்களும் போய்ச் சேருகின்றன. காகை - மாலை நாளேடுகள் வணிக நோக்கோடு வெளிவருபவையே: அவற்றுக்குப் பணம் சம்பாதிப்பதே குறிக்கோள்! கொள்கைக்காக வரும் ஏடுகள் சிலவே! சிற்றேடுகள் என்பவை பெரும்பாலும் ஏதோ ஒரு கொள்கைக்காக வருபவையே! இவை மெழுகுவத்திபோல் தங்களையே உருக்கிக்கொண்டு சிந்தனை வெளிச்சத்தை வழங்குபவையே! இவைகள்தாம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவை!தந்தை பெரியாரின் குடிஅரசு, பேரிறிஞர் அண்ணாவின் திராவிடநாடு, கலைஞரின் முரசொலி போன்றவைதாம் அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியவை. இந்த இதழ்கள் இன்றும் பலரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை தமிழின எழுச்சியின் வரலாற்றுக் களஞ்சியங்களாகும். தமிழின முன்னேற்றத்துக்காக இன்றும் பல சிற்றிதழ்கள் குரல் கொடுத்து வருகின்றன. இவை வணிக இதழ்கள் அல்ல. இவை மாதந்தோறும் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிவருகின்றன. இவற்றிற்குத்தான் தமிழக அரசு ஆதரவுக் கரத்தைக் கொடுக்கவேண்டும்.இன்று தமிழகத்தில் 3000க்கு மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்குச் சிற்றிதழ்களை வாங்கி ஆதரிக்கலாம். மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அரசு விளம்பரங்களை வழங்கியும் உதவலாம்.பின்வரும் வகையில் உதவலாம்:1. இருபது ஆண்டுகளுக்குமேல் வரும் இதழ்கள்; ஆர்.என்.அய். பதிவும், அஞ்சலகச் சலுகையும் பெற்ற இதழ்கள்.2. பத்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள்.3. அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள் எனப் பகுத்துக்கொண்டு இந்த ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் வெளிவரும் இதழ்களுக்கும், 2009ஆம் ஆண்டு அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்களுக்கும் அரசு உதவலாம்.ஒவ்வொரு மாவட்ட நூலகமும் 100 இதழ்களை பெற்று உதவலாம்.- முகம் மாமணி.-குறிப்பு: சிற்றிதழ் அன்பர்களே! மேற்கண்ட கோரிக்கைகள் தங்களுக்கானது; தங்களது சிற்றிதழ்களிலும் வெளியிட்டு உதவுக. கூட்டுக்குரல் கொடுத்தால் கலைஞர் அவர்கள் உடனே ஆவன செய்யக்கூடும்.(முகம், இதழ் - செப்டம்பர் - 2008)
நன்றி:கீற்று / சிந்தனையாளன் - அக்டோபர், 2008