Wednesday, January 14, 2009

அதிர்வு

" 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த வள்ளலாரின் காலடித் தடங்கள் பதித்த கடலூர் மண்ணிலிருந்து தமிழின உறவுகள் கைகோர்க்கும் முற்போக்கு முயற்சிகளோடு இதோ உங்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம் முதல் அதிர்வினை" என்கிற அறிவிப்புடன் Êசம்பர் 2005இல் இருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது 'அதிர்வு' - இலக்கியப் பண்பாட்டு மாத இதழ். இதன் ஆசிரியர், தடா.நல்லரசன், ஆசிரியர் குழு : புகழ் மங்கான், கு.பரிதிவாணன், வி.சு.அன்புச்செல்வன், சிவா.கார்த்திகேயன், ஏழுமலை, கா.வெற்றியழகன்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு என வெளியாகி வருகின்றன. பிடல்காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களது சிந்தனைகள் ஆங்காங்கே வெளியிடப் படுகின்றன. 'தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில் வழக்கிலுள்ள பிறமொழிச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் வழங்கப்படுகின்றன. படைப்புகள் பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வூட்டும் தன்மையுடன் வெளிவருகின்றன. தலித்தியம், தமிழ் தேசியம், மார்க்சியம் சார்ந்த கோட்பாடுகளை வெளிப்படுத்துவனவாக படைப்புகள் வெளிவருவது அதிர்வின் தனித்தன்மை எனலாம். மிகவும் முற்போக்கான கருத்துகளை தமிழின் தொன்மை வடிவங்களான ஒப்பாரி, தாலாட்டு வடிவில் கவிதைகள் வெளிவருவதும் அதிர்வின் சிறப்பாகும். அவ்வகையில் முதல் இதழில் வெளியான 'எத்தனை முறைதான் அழுவது' எனும் தலித்தியப் பாடலும், இரண்டாம் இதழில் வெளியான 'ஈழத்தாலாட்டு' பாடலும் குறிப்பிடத்தக்கன.

'கெடல் எங்கே தமிழர் நலம்
அங்கெல்லாம் சென்றுகிளர்îசி செய்க' என்கிற

பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிப் பாடலோடு அவரது படமும் முதல் இதழின் அட்டையில் வெளியானது. "நாணல்கள் தலையாட்டும் ஆற்றங்கரைகளோடு, மூலிகைச் செடிகள் படர்ந்திருக்கும், வாய்க்கால், வரப்புகள் என பசுமைபூத்த இலைகள் வருடும் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் கிராமங்கள்தோறும் இலக்கிய படைப்புகளைப் பதிவு செய்யமுடியாமல் அடைகாத்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும், நகரங்கள் தோறும் நச்சுப் புகை நுகர்ந்து நான்கு சுவற்றுகள் சுயநலத்தோடு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தூங்கி வழிகின்ற இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளையும் பதிவு செய்து அவர்களை மெருகேற்றுவதே இதழின் நோக்கமும் தாகமும் ஆகும்" என இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது முதல் இதழின் தலையங்கம். முதல் இதழில் வெளியாகியுள்ள இள.புகழேந்தியின் 'கடவுளைப் படைத்தவன் மனிதன்', கா.தமிழ்வேங்கையின் 'திரைப்படத்தில் வன்முறை', பழநெடுமாறனின் 'சுவடுகள்' இரண்டாம் இதழில் வெளியாகியுள்ள வேல்தொண்டைமானின் 'தீர்வினைத்தேடி' ஆகியவை முக்கியமான கட்டுரைகளாகும்.

கா.தமிழ்வேங்கை, பைந்தமிழ்பாவை, அ.மோகன்ராசு, க.பூபாலன், பித்தன்கல்கி, ஏ.தனு‰கோடி, கு.பரிதிவாணன், ஆல்பேட்டைபாபு, ந.பர்னாட் பாத்திமா, அமுதராஜ், இரா.மோகன்தாசு, ந.சுரே‰ நாராயணன், வெண்ணிலவன், புவனாதனு‰கோடி, இரா.அப்பாஜி, தொ.எழில்நிலவன், கி.பாலு போன்றோரது கவிதைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த அல்லம் ராசைய்யாவின் 'புயல்' மொழிபெயர்ப்புச்சிறுகதை இரண்டாவது இதழில் வெளியாகியுள்ளது.

சில நேரங்களில், நடையைக் குறித்து அக்கறை கொள்ளாமல் கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் கவிதைகள் வெளியிடப்படுகின்றன. அரசியலுடன், வெளிப்படுத்தும் முறையும் முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு கவிதைகளை கறாராகத் தேர்வு செய்து வெளியிட்டால் அதிர்வுக்கு இன்னும் 'அதிர்வு' கூடும்.

ஆசிரியர் பற்றி....

விதைநெல், வாக்குமூலம், முகங்கள் கவிதைத் தொகுப்பும், 'தழும்புகள்' ஹைக்கூ அந்தாதி தொகுப்பு, 'திசைகள்' எனும் நவீன ஆத்திச்சூடி தொகுப்பும் எழுதியிருக்கும் தடாநல்லரசன், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ளவர்.

சந்தா மற்றும் முகவரி :
தனி இதழ் - ரூ. 5.00
ஆண்டு சந்தா - ரூ. 100.00

முகவரி :
4/7, சபாபதி தெரு,
மஞ்சகுப்பம்,
கடலூர் - 607 001.
பேச - 04142 284184, ௨௩0௪௭௭

நன்றி : அந்திமழை

No comments: