Wednesday, January 14, 2009

கூட்டாஞ்சோறு

" இயக்கத்தின் நுட்பமும்
இயங்குவதன் விசையும் உழைப்பின்
விரல்களில்தான்.
வடிக்கும் ஆற்றலை
இயக்கும் ஆளுமையை
கூத்தாய் கொண்டாட்டமாய்
பாட்டாய் இசையாய் இலக்கிய வடிவாய்
படைப்போம்.
மக்களுடன்...
மக்களிடமிருந்து...
மக்களுக்காக...
எழுத்தாய் இயக்கமாய் எழுவோம்"

மக்களுக்கான கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'கூட்டாஞ்சோறு' காலாண்டிதழின் (ஜுலை-செப்.2005) தலையங்கம் இது.

முதல் இதழ் 2004 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை 'மணிக்கொடி' மூத்த எழுத்தாளர் சிட்டி வெளியிட இளைய தலைமுறை எழுத்தாள÷ கவிஞர் ஆசு பெற்றுக்கொண்டார். மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் நோக்குடன் இவ்வாறு நிகழ்ச்சியை வடிவமைத்ததாகக் குறிப்பிடுகிறார்,இதன் ஆசிரியர் மயிலை பாலு.

இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் குழு: கே.பி. பாலச்சந்தர், சூரியசந்திரன். இரா. குமரகுருபரன், சிவசெந்தில்நாதன், தா. மணிமேகலை.

"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தென் சென்னை மாவட்டக் குழுவின் முயற்சியில் இவ்விதழ் வெளிவந்தாலும் இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இதழ் அல்ல. தமிழ்நாடு முழுக்க பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு மூத்த படைப்பாளியின் நேர்காணல், தமிழின் முக்கியமான ஓவியர்களின் அட்டைப் பட ஓவியம் முதலியன கூட்டாஞ்சோறின் சிறப்பம்சமாகும்.

கவிதைகளும், சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியிடப்படுகிண்றன. இருண்மையற்ற எளிமையான படைப்புகளையே வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது கூட்டாஞ்சோறு.

முதல் இதழில் அம்பேத்¸¡ர் பற்றிய சிறப்புக் கட்டுரை, இரண்டாம் இதழில் விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரை வெளியானது.

தொடர்ந்து பெரியாரின் 125ஆம் ஆண்டை முன்னிட்டு பெரியாரின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து ஒரு கட்டுரை (அக்-டிசம்பர் 2004) இதழில் வெளியானது. பரவலாக பேசப்பட்ட கட்டுரை இது,

மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் நூற்றாண்டையொட்டி 'தாய்' நாவல் குறித்தும் அது தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவான கட்டுரை(ஏப்-ஜூன் 2005) இதழில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் குறித்த கட்டுரை வெளியானது. அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் அரவாணிகளைப் பற்றியும் அவர்களது கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றியும் விரிவானதொரு கட்டுரை இதே இதழில் வெளியானது.

நவீன தமிழ் இலக்கியச் சூழலில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதும் கூட்டாஞ்சோறின் உள்ளீடுகளில் ஒன்றாகும். அவ்வகையில் பெண்மொழி பற்றிய ஒரு கலந்துரையாடலை கூட்டாஞ்சோறு நிகழ்த்தியது.

பத்மாவதி விவேகானந்தன், பா. ¦ƒயப்பிரகாசம், லீனா மணிமேகலை, அரங்க மல்லிகா, அ. வெண்ணிலா, த. மணிமேகலை, மயிலை பாலு உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை கூட்டாஞ்சோறு வெளியிட்டு வருகிறது.

வல்லிக்கண்ணன், இன்குலாப், சிற்பி, ஆ.சிவசுப்பிரமணியன், அ. மார்க்ஸ், ஈரோடு தமிழன்பன், தொ. பரமசிவம், ஆஷாபாரதி ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறு.

இதுவரை ஆதிமூலம், விஸ்வம், புகழேந்தி, நெடுஞ்செழியன், வின்சி ஆகியோரின் ஓவியங்கள் அட்டையை அலங்கரித்து வந்திருக்கின்றன. கூட்டாஞ்சோறு சார்பில் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் மயிலை பாலு பற்றி:

பத்திரிகையாளராகப் பணியாற்றும் மயிலை பாலு ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்.

'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்', 'நள்ளிரவில் சுதந்திரம்' (வி.என். ராகவனுடன் இணைந்து, 'வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்', 'சூறாவளி' (சீன நாவல்) ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நள்ளிரவு சுதந்திரம் நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றிருக்கிறார்.

இனி அவருடன் சில விநாடிகள்....

கூட்டாஞ்சோறின் நோக்கம் என்ன?

"இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது, முற்போக்குச் சிந்தனையுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனை இணைப்பை உருவாக்குவது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்திருக்கும் ஒரே சிந்தனை உடையவ÷¸ளை ஒருங்கிணைப்பது, புதிய படைப்பாளர்களிடம் மாற்றுச் சிந்தனையை முன் வைத்து எழுதத் தூண்டுவது, எதார்த்தவாதத்தை நோக்கி இளம் படைப்பாளர்களைத் திருப்புவது ஆகியவை கூட்டாஞ்சோறின் முக்கிய நோக்கங்களாகும்".

கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா?

"ஆசிரியர் குழு, நிர்வாகக் குழு என இதழுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லோரது அனுபவமும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு ஆகிறது. அத்துடன் கூட்டு முயற்சி தேவை என்பதாலும், அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதாலும் கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டோம்" என்கிறார், ஆசிரியர் மயிலை பாலு.

கூட்டாஞ்சோறு- இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக வந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ 10/
ஆண்டு சந்தா ரூ 40/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
'கூட்டாஞ்சோறு',
3; சி பிளாக், வள்ளீஸ்வரன் தோட்டம்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை- 600 028.
செல்பேசி: 9444 4140344/ 9444 271479

நன்றி : அந்திமழை

No comments: