Wednesday, January 14, 2009

கல்வெட்டு பேசுகிறது

ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை சிற்றிதழ்கள்.வணிகப் பார்வைகளைத் தவிர்த்து சமூக நோக்கத்துடன் இயங்குபவை இவை.உலக அளவில் கலை, இலக்கியம்,அறிவியல், அரசியல் எனப் பல தளங்களிலிருந்து சிற்றிதழ்கள் தமிழில் வெளிவருகின்றன.சிற்றிதழ் வாசகர்கள்,தரமான வாசகர்கள் என்று நம்பப்படுகிறது.சில கவனிக்கத்தக்க சிற்றிதழ்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். முதல் இதழாக - கல்வெட்டு பேசுகிறது.

'கல்வெட்டு பேசுகிறது' முதலில் கல்வெட்டு என்னும் பெயரில் 1996 செப்டம்பரில் வெளிவந்தது.பிறகு 1997ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவரத் துவங்கியது.1999 வரை வெளியான இதழ்களில் தனித் தமிழ், தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளின் தாக்கம் அதிகமாயிருந்தது.

இடையில் பெரும்பான்மையான சிற்றிதழ்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல் நோய், கல்வெட்டு பேசுகிறது' க்கும் ஏற்பட இதழ் சிறிது காலம் வெளிவராமல் இருந்தது.

2001 அக்டோபரிலிருந்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.தனித் தமிழ், தமிழ்த் தேசியம் என்பதிலிருந்து விலகி நவீன இலக்கியம் சார்ந்து வெளிவரும் இவ்விதழை நண்பர்களின் உதவியுடன் நடத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் சொர்ணபாரதி.

வல்லிக் கண்ணன், பிரபஞ்சன், இன்குலாப், ஜெயகாந்தன், தேவதேவன், விக்ரமாதித்யன், ஜெயமோகன், உள்ளிட்ட தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகலைக் கொண்டு இவ்விதழ் வெளியிட்ட இலக்கிய மலர் 2003 , தமிழ் இலக்கிய உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது.

1997, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சிறந்த சிற்றிதழுக்கான தமிழ் சிற்றிதழ் சங்க விருதையும்,2003 ல் பண்ணைத் தமிழ்ச் சங்க விருதையும் 'கல்வெட்டு பேசுகிறது' இதழ் பெற்றிருக்கிறது.

'செய்வதைத் துணிந்து செய், சொல்வதைத் தெளிந்து சொல்' எனும் பாரதியின் முழக்கத்தோடு பதினாறு பக்கங்களில் சிறிய அளவில் வெளிவந்தாலும், நவீன இலக்கியத் தளத்தில் கலை ,இலக்கிய, அறிவியல் கருத்துகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதிலும்,விமர்சனங்களை முன்வைப்பதிலும் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்து வருகிறது.

இவ்விதழ் ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி 'மனவெளியளவு' எனும் கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.இவர் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

இதழ் தொடர்பு முகவரி
-----------------------

'கல்வெட்டு பேசுகிறது'
924ஆ, 29 வது தெரு,
பக்தவச்சலம் நகர்,
வியாசர்பாடி,
சென்னை- 600039
தொலைபேசி: 9444106998

நன்றி : அந்திமழை

No comments: