Wednesday, January 14, 2009

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ் - மலேசியா

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்
மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099

தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!

நன்றி: சுப.நற்குணன் - மலேசியா
http://www.thirutamil.blogspot.com/

1 comment:

அன்பு நிலையம் said...

சிற்றிதழ்களின் முகவரியும் சுருக்க விளக்கமும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

பாராட்டுகள்.