Wednesday, January 14, 2009

நிழல்

ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள் பறந்து பறந்து அடிக்கும் நாயகன், நாயகனைத் துரத்தித்துரத்திக் காதலிக்கும் நாயகி என வழக்கமான இத்தகைய தமிழ் சினிமாக்களின் நிழல் படாத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம். அத்தகைய ரசனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன சினிமாவிற்கென 'நிழல்', 'செவ்வகம்', படப்பெட்டி' போன்ற ஒருசில இதழ்களே வெளிவருகின்றன.இவற்றில் முக்கியமானது 'நிழல்'. தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. நிழல். இது நவீன சினிமாவிற்கான களம். ஆசிரியர் பா. திருநாவுக்கரசு.

2001ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக 22 இதழ் வெளிவந்து திரைப்பட இதழியலுக்கு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. இப்போது (ஜூலை - ஆகஸ்டு 2005) 5 - ஆம் ஆண்டு சிறப்பிதழாக வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், அவர்களது திரைப்படங்கள், சினிமா பற்றிய பயிற்சியும், உலக திரைப்பட வரலாறு மற்றும் இந்திய திரைப்பட வரலாறு என வாசகர்களுக்கு தேவையான தரமான சினிமாவைப் பற்றிய புரிதலைத் தரும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறந்த படத்தின் கதை வசனத்தை வெளியிடுவது நிழலின் சிறப்பாகும். அத்துடன் ஒவ்வொரு இதழிலும் பத்துக் குறும்படங்கள் பற்றிய விமர்சனம் வெளிவருகிறது. திரைத்துறை சார்ந்தவர்களின் பேட்டிகளும், திரைப்பட தொழில் நுட்பம் குறித்தும், உலக திரைப்பட விழாக்கள் குறித்தும் கட்டுரைகள் வெளிவருகின்றன. நவீன சினிமா குறித்து சிறந்த புலமை உடையவர் பா.திருநாவுக்கரசு. உலக சினிமா பற்றிய இவரது பார்வை விரிவடைய ஆடுகளம் இராமானுஜம் (ஈரான்), யமுனா ராஜேந்திரன் (லண்டன்), பாலு (சென்னை) போன்ற நண்பர்கள் உதவியுள்ளனர். தமிழகத்தில் குறும்படப் பயிற்சி பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறார். வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த நண்பர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளுக்கு தமிழகக் குறும்படங்களையும் விவரணப்படங்களையும் கொண்டு செல்கிறார். குறும்பட விழாக்களில் பங்கேற்கச் செய்து பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்.

'பாரீஸ் நண்பர்கள் வட்டம்' ஐரோப்பா முழுக்க, தமிழகக் குறும்படங்களும் விவரணப்படங்களும் திரையிடப்பட்டு, பத்து பேருக்கு எழுபதாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் ' நியூஜெர்ஸி தமிழ் சங்கம்' சார்பில் 2003 -ல் குறும்படவிழா நடைப்பெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற பதினாறு பேருடைய படங்களுக்கு 1,30,000 ரூபாய் எழுத்தாளர் ஜெயக்காந்தன் முன்னிலையில் பரிசளிக்கப்பட்டன. டொரான்டோவில் நடைப்பெற்ற மூன்றாவது 'சர்வதேச குறும்பட விழாவில் செங்கோ மோகனுக்கு அவர் இயக்கிய 'ஈசல்' படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. சுவிஸ் குறும்பட விழாவிற்கும் தமிழகத்திலிருந்து படங்கள் அனுப்பப்பட்டன.

தொகுப்பாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாசிரியர், குறும்படப்பிரச்சாரகர், இசை ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் பா.திருநாவுக்கரசு. வீணை தயாரிப்பது பற்றிய குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜூலை 2005 ல் தொடங்கப்பட்டுள்ள ' தமிழ்நாடு ஆவணப்படம் மற்றும் குறும்படப் படைப்பாளிகள் சங்கத்தின்' ஆலோசகராகவும் செயல்படுகிறார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி 'சொல்லப்படாத சினிமா' எனும் புத்தகத்தை சமீபத்தில் தொகுத்து வெளியிட்டார்.' சோழநாடன்' எனும் புனைபெயரில் இசைக் கலைஞர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார். இதுவரையில் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை வரலாறு, கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு, வீணை : அதன் பேர் தனம் போன்ற இசை தொடர்பான புத்தகங்களையும், 'இன்டர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு ' எனும் புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். அத்துடன் முக்கியமான பல மூன்றாம் உலகநாடுகளின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளையும் தம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது அனைத்து கலை இலக்கியப் பணிகளும் தொடந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவரிடம் இரண்டு கேள்விகள்:

* நவீன சினிமாவிற்காக இதழ் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

" பன்னீர்செல்வம், நாகர்ஜுனன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடத்தி வந்த சென்னைத் திரைப்பட சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தேன். அப்போது உலகப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தரமான சினிமா பற்றிய புரிதல் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. அந்த அடித்தளம் தான் இன்னும் நான் செயல்படக் காரணம். 1994 - ல் உலகச் சினிமா நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது சென்னை திரைப்படச் சங்கம் செயல்படவில்லை. எனவே 'நிழல்' நடமாடும் திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஆரம்பித்து, கிராமங்களுக்குச் சென்று தரமான வெளிநாட்டுத் திரைப்படங்களை எல்லாம் போட்டுக்காட்டினோம். இன்றுவரை அப்படி செய்கிறோம். 1994 - ல் 'மக்களுக்கான சினிமா' என்கிற புத்தகத்தை வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 'நிழல்' இதழை தொடங்கினோம்."

* தமிழ்க் குறும்படங்களின் போக்கு தற்போது எப்படி இருக்கிறது?

"வருடத்திற்கு நூறு படங்களாவது வருகின்றன. அவற்றில் பத்து படங்கள்தான் தேறுகின்றன. டிஜிட்டல் ஹேண்டி கேமரா வரவாலும் கல்லூரிகளில் தகவல் தொடர்பியல் கல்வி அதிக அளவில் அறிமுகப்படுத்தப்படுவதாலும் இது சாத்தியமாகிறது. 'எல்லோரும் படம் எடுக்க வந்துவிட்டர்கள்' என்றொரு கோஷம் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. சினிமா மக்களின் கைக்கு வருவதை பொருக்க முடியாதவர்களின் ஓலம் அது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் சினிமாவில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டாகவும் இன்று குறும்படங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போக்கு ஆபத்தானது. எப்படி இருந்தாலும் நல்ல படங்களைக் காலம் தீர்மானிக்கும்".

தமான சினிமா தேடல் உள்ளவர்களுக்கான சிறந்த இதழ் 'நிழல்'.(நவீன சினிமாவுக்கான களம்)

தொடர்பு முகவரி:
31/48 இராணி அண்ணாநகர்,
சென்னை - 600 078.
செல்பேசி : 94444 ௮௪௮௬௮

நன்றி : அந்திமழை