Friday, July 25, 2008

முங்காரி, மகாகவி

வாசிக்க வாருங்கள்
தமிழ் வாசிப்பில் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்துக்கு மாற்றான புதிய சிந்தனைகளையும் கலகக் குரல்களையும் காண முடிகிற ஒரு களம் சிற்றிதழ்களின் உலகம். ஆனாலும் ஒரு அடையாளம் போல மூட்டு வரை நீண்ட ஜிப்பாவும் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையும் குறுந்தாடியுமாக இருந்தால் தான் கவிஞன், சிறு பத்திரிகையாளன், சிந்தனையாளன் என்று பொதுஜனங்கள் மத்தியில் இருந்த கேலிக் குரல்கள் குறித்து எந்தக் கவலையும் இன்றி கலகம் என்பதே இலக்கியம் என்பதாக ஒரு கட்டத்தில் இலக்கியச்சூழல் இருந்தது. அதன் காரணமும் தெளிவானது. வெகுஜன இதழ்களால் கட்டமைக்கப் பட்ட ஒழுங்கமைவுகளை மீறுதல் என்பதே இலக்கியச் சிறுபத்திரிகைகளின் நோக்கமாக இருந்தது. அதே சமயம் பல இலக்கியக்கூட்டங்கள் கேலிக்கூத்தாக முடிந்து போகவும் இவர்களில் சிலர் காரணமாக இருந்துள்ளனர். தன் வெளிப்பாடு மட்டுமே நோக்கமாகவும் பல இதழ்கள் வந்து போயின. எப்படி இருந்தாலும் நல்ல இலக்கியப் படைப்புகளின் உருவாக்கத்துக்கு சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது மறுக்க இயலாதது. இன்றும் பலநூறு சிற்றிதழ்கள் தனிநபர்கள், நண்பர்கள் குழாம், சங்கங்கள், படைப்பாளர் இணைவுகளின் மூலம் வெளியிடப் படுகின்றன. இலக்கியவாதிகளும் காலப்போக்கில் வெளித்தோற்ற அடையாளங்களை துறந்து சமூகத்தின் பொது அடையாளங்களுக்குள் நுழைந்து விட்டபோதிலும் சிற்றிதழ் இலக்கியத்தின் தனி அடையாளங்களை இன்றளவும் சிறுபத்திரிகைகள் தொலைத்துவிடவில்லை.மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம், வானம்பாடி காலம் என தனித்த இயக்கங்களாக ஒரு சமயத்தில் சிற்றிதழ் இயக்கம் இருந்திருக்கிறது. இன்றைய வலைப்பதிவுலகம் போலவே பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாக எண்பதுகளுக்குப் பிந்திய சிற்றிதழ்ச்சூழல் இருந்துள்ளது. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடரும் சில இதழ்கள் உட்பட தீர்மானமான இலக்குடன் வந்த இதழ்களும் அவற்றில் இருந்தன.சிற்றிதழ் பரவலாக்கத்தை இன்னொரு விதமாகவும் வலைப்பதிவோடு ஒப்பிட முடிகிறது. வலைப்பதிவுகளை இன்று திரட்டிகள் வழியாக வாசிப்பது போலவே சிற்றிதழ் திரட்டிகளும் அன்று இருந்தன.தமிழ்ச் சிற்றிதழ்களைச் சேகரித்து கண்காட்சி அமைத்துப் பாதுக்காத்த சில நண்பர்களுக்கு எல்லா சிற்றிதழாளர்களும் தங்கள் சிற்றிதழின் ஒரு பிரதியை அனுப்புவது வழக்கமாக இருந்தது. கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நசன் அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அவர் தான் சேகரிக்கும் சிற்றிதழ்களின் விவரம் முகவரி மற்றும் சில குறிப்பிட்ட படைப்புகளின் அறிமுகம் அடங்கிய காலாண்டிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அந்த இதழின் பெயர் சிற்றிதழ்ச் செய்தி. சிற்றிதழ்ச் செய்தி இதழ் தமிழில் வெளியாகும் அனைத்து இதழ்கள் பற்றிய விவரங்களை இதழாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிமாறி சிறந்த தகவல் திரட்டியாக செயல்பட்டு வந்தது. பொள்ளாச்சி நசன் இப்போது தமிழம்.நெட் தளத்தின் மூலம் தனது சேகரிப்புக்களை பதிவு செய்திருப்பதோடு தாய்த்தமிழ்ப் பள்ளியையும் இணையம் வழி தமிழ் கற்பிக்கும் சேவையையும் வழங்கி வருகிறார்.அடுத்து திருச்சியைச் சேர்ந்த நண்பர் தி .மா சரவணன் என்பவர் தனது கலைநிலா நூலகத்தின் மூலம் தமிழ் சிற்றிதழ்களை சேகரித்து தமிழகம் முழுவதும் அவற்றை கண்காட்சியாக வைத்து சிற்றிதழ்ப் பரவுதலுக்கு உறுதுணையாக இருந்தார். அவரும் சிற்றிதழ் விவரங்கள் அடங்கிய வெளியீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.கோவையைச் சேர்ந்த குன்றம் இராமரத்நம் என்ற படைப்பாளர் தாராமதி என்ற சிற்றிதழை நடத்தி வந்தார். அவரும் பிற சிற்றிதழ் நண்பர்களுமாக தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தை தோற்றுவித்தனர். பின்னர் அவர் தொடங்கிய முங்காரி என்ற சிற்றிதழ் தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாக நடத்தப் படுகிறது. சங்கத்தில் இணையும் உறுப்பிதழ்கள், சங்கத்துக்கு வரும் இதழ்கள் போன்றவை இந்த மாத இதழில் தொடர்ந்து அறிமுகம் செய்யப் படுகின்றன. அதில் தரப்பட்டுள்ள முகவரிகளில் தொடர்பு கொண்டு தேவையான சிற்றிதழை வாசகர்கள் நேரடியாகப் பெற இயலும்.முங்காரிஆசிரியர்: குன்றம் மு.இராமரத்நம்புலமைப் பண்ணை,சுகர்கேன் அஞ்சல்,கோவை-641 007.தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்ற சில நண்பர்கள் உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். அதன்பொதுச் செயலாளர் வதிலை பிரபாவின் மகாகவி இதழே சங்கத்தின் குரலாக ஒலிக்கிறது. இதிலும் இந்தச் சங்கத்தின் உறுப்பிதழ்கள் தொடர்ந்து பட்டியலிடப்பட்டு அறிமுகம் செய்யப் படுகின்றன. பிற சிற்றிதழ்களும் அறிமுகம் செய்யப் படுகின்றன.மகாகவிஆசிரியர்: வதிலை பிரபா9-16-18/2, ஒற்றைத் தெரு,வத்தலக்குண்டு- 624 202திண்டுக்கல்மாவட்டம்வெகுஜன இதழ்களின் சமூக அரசியல் பரப்புரைகளின் கயமைகளை தோலுரித்துக் காட்டும் அற்புதமான கருத்துக் களஞ்சியங்களாக சிற்றிதழ் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்த விஷயங்களின் புரிந்த பலவற்றின் புரியாத, தெரியாத பக்கங்களை அறிந்து கொள்ள முடியும். ஆழமான வாசிப்பை விரும்புகிறவர்களுக்கு வாசித்தலின் பின்னான சிந்திப்பை தரும் படைப்புக்களை, மக்களின் மொழிகளில் உருவான படைப்புக்களை வாசிக்கலாம்.

நன்றி : சிந்தாநதி

No comments: