Friday, July 25, 2008

சௌந்தர சுகன்

சௌந்தர சுகன் 250
1987 ஜூனில் ஆரம்பித்து இந்த மாதம் தனது 249 வது இதழை வெளியிடும் வரை தொய்வில்லாமல் ஒரு தனிநபர் சிற்றிதழ் நடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் தந்து, அதற்கு மேலாக பத்தோடு பதினொன்று என்ற அளவில் இல்லாமல் இன்றுவரை தனித்துவம்மிக்க இதழாக வெளி வருகிறது சௌந்தர சுகன்.கையெழுத்து இதழாக ஆரம்பித்து அச்சிதழாக தொடர்ந்தபின் கணினி அச்சுக் கோர்ப்பில் ஆப்செட்டில் வந்த போதும் அதன் அடையாளமோ உள்ளடக்கத்தின் தீர்க்கமோ மாறவே இல்லை. விளம்பரங்களே வெளியிடாமல் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாமல் வெளி வருகிறது என்பதும் சுகனை பிற சிற்றிதழ்களில் இருந்து தனித்துவப் படுத்துகிறது.வண்ணப்படங்களும் பகட்டுகளும் இல்லை. கலைநயமிக்க ஓவியங்கள் அல்லது படைப்புக்கு தேவையான புகைப்படங்கள் இவை தவிர பெரிய அலங்காரங்கள் எதுவும் இல்லை. ஆனால் 120 பக்கங்களுக்கான உள்ளடக்கத்தை சுமார் 54 பக்கங்களில் நெருக்கமாக அச்சிடுவது அதன் சிக்கனம் எனலாம். பத்து ரூபாயில் தரமான உள்ளடக்கத்துடன் இருபது ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவரும் சிற்றிதழ்...இளமை அரும்பிய பருவத்தில் தஞ்சை பூமியில் இருந்து க.சு.சரவணன் வெளியிடத் தொடங்கிய சுந்தரசுகன் பின்னர் பதிவுக் காரணங்களுக்காக சௌந்தரசுகனானது. கடித இலக்கியம் இதன் பயணத்தில் மிகப்பெரிய அடையாளம். இலக்கியவாதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட இலக்கிய வாழ்வியல் சுவை கொண்ட கடிதங்களை அவர்களிடமிருந்து பெற்று கடித இலக்கியமாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது சுகன்.ஆண்டு தோறும் தஞ்சை பிரகாஷ் என்ற படைப்பாளியின் நினைவுமலர் வெளியிடுகிறது. அரசியல் சமூகத்தளங்களில் எண்ணக்கண் திறப்போம் என்ற முழக்கத்துடன் தீர்க்கமான தலையங்கங்கள், கூர் என்ற பெயரில் வாசகர்களின் விரிவான விமர்சனப் பக்கங்கள், விளக்கமான புத்தக விமர்சனங்கள், சமூகவியல் படைப்பாக்க போராளிகளை அறிமுகம் செய்யும் நேர்முகங்கள், ஜனரஞ்சக இதழ்களில் காண முடியாத தரமுள்ள கதைகள், கவிதைகள் என சுகனின் படைப்புலகம் சிந்தனைத் தளத்தில் தாக்கத்தை தரவல்லதான சுற்றத்தைத் கொண்டது.இன்று பிரபலமடைந்துள்ள, பிரபலமடைந்து வரும் பல கவிஞர்கள், கவிதாயினிகள் ஆரம்ப களமாக சுகனில் கவிதை புனைந்தவர்கள். குறிப்பாக தஞ்சைப்பக்கமிருந்து வந்த எந்தக் கவிஞரும் சுகனில் எழுதியிராமல் இருந்திருக்க இயலாது. விளம்பரங்களை ஏற்காமல் தனிமனித உழைப்பில் பொருளில் தொடரும் இந்தச் சிற்றிதழ் மார்ச் இதழ் 250 வது இதழாக மலர்கிறது.249 வது இதழ் தலையங்கத்தில் கடந்து வந்த பாதை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அந்த வெளியீட்டு விழாவை நண்பர்களோடு கொண்டாட முடிவு செய்து அதுபற்றி கூறுவது..."தலையங்கப் பக்கத்தில் இந்த விழா பற்றிய செய்திகள் தேவையா என்று சிலர் நினைக்கக் கூடும். இது சுகன் இதழ் விழா... ஒரு சிற்றிதழ் தமிழ்ச் சமூகத்தில் எப்படி புரண்டு வருகிறது என்பதை அவசியம் பதிவு செய்ய வேண்டும். இத்தகையப் பதிவுகள் தான் நாளைய நம்பிக்கைகளை முளைக்க வைக்கும் தட்பவெப்பமாய் அமையும். இந்த விழா நோக்கம் பெரும் கூட்டத்தை கூட்டுவது அல்ல. உணர்வாளர்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தம்தம் வெப்பத்தை பரிமாறிக் கொள்ளும் சந்திப்பு தான் இது. அடுத்தக் கட்ட பாய்ச்சலை எப்படி நிகழ்த்துவது என்பதை வேறு எங்கு போய் கற்க முடியும். நாம் கூடி, நாம் பேசி நாம் சிந்தித்து நாம் தானே செயலாற்ற வேண்டும்...என்ன சரிதானே?"சௌந்தர சுகன் - 250 - விழா16-3-2008 - ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில்...(ஜூபிடர் திரையரங்கம் அருகில்)
*சௌந்தரசுகன்அம்மாவீடுசி-46,
இரண்டாம் தெருமுனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613007
ஆண்டுச் சந்தா ரூ.120.

நன்றி : சிந்தாநதி

No comments: