Friday, April 27, 2012

தமிழர் நாடு

தமிழர் நாடு - சிற்றிதழ் அறிமுகம்

இனம்மொழிநா டெம்முரிமை யாம்வெல்லு மட்டும்
தணியாதெம் நெஞ்சின் தழல்
-ம.லெ.தங்கப்பா


என்ற அனல் தெறிக்கும் வரிகளுடன், தமிழர் என்ற இனம் காக்கப்படாமல் மொழியை  காக்க இயலாது என்கிற தலையங்கத்தோடு, இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலையை வருத்ததுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

கூடங்குளம் இன்று சர்வதேச பார்வையை எட்டியுள்ளது என்றால் இடிந்தகரை மக்களின் அறவழியிலான, கட்டுகோப்பான போராட்டமே. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூகத்தில் ஆகப் பெரிய இயக்கங்கள் சாதிக்கவியலாத கட்டமைப்பை, ஒழுங்கமைவை சாத்தியப்படுத்தியவர் உதயகுமார் என்ற ஒற்றை மனிதர். அவருக்கு பின்னால் தமிழகம் அணி திரள வேண்டியது, ஆனால் நமது துரதிஷ்டம் இடிந்தகரை மக்கள் மட்டுமே போராடுவது போன்ற ஒரு மாயை அரசும் திட்டமிட்டு உருவாக்கிவிட்டது. அதற்கு விழிப்புணர்வற்ற மக்களும் இரையாகியுள்ளனர் என்பது தான் வேதனை. எட்டு மணி நேர மின்வெட்டை திட்டமிட்டே அரசு உருவாக்கி ஒரு பகுதி மக்களை அணுஉலைக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது இன்றைய ஆளும் வர்க்கம். இந்த மோசடியான மக்களை ஏமாற்றும் வேலையை அரசு தொடர்ந்து செய்ய இயலாது என்பதே வரலாற்று உண்மை. ஏமாறுகிற மக்கள் ஒரு நாள் கேள்வி கேட்கிற காலம் வரும், அது அரசுகள் வீழ்கின்ற காலமாக அமையும். கல்பனா சதீசு எழுதியுள்ள 'கூடங்குளம் அணுஉலை வெளிக் கொண்டு வரும் உண்மைகள்' கட்டுரை இடிந்தகரை மக்களின் உண்மை நிலையை நம்முன் நிறுத்துகிறது.

தமிழகத்திற்கு முழு உரிமையுள்ள காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்று நீர் சிக்கல்களில் நமக்கு எதிராக துரோகமிழைத்துக் கொண்டு இருக்கும் திராவிட(?) மாநிலங்களுக்கு, நெய்வேலியில் இருந்து தினம் தோறும் மின்சாரம் அனுப்பபடுகிறதே? இதை யார் கேட்பது? யார் தடுப்பது? இந்த கேள்விகளை முன்வைத்து 'பறிபோகும் நெய்வேலி மின்சாரம்' கட்டுரையில் கா.தமிழ்வேங்கை வெளிப்படுத்துகிறார். முல்லை பெரியாறு அணையை உடைக்க காத்திருக்கும் மலையாளிகள், நமது நெய்வேலி அனல் மின் நிலையத்தில் சுமார் 5,000 த்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர் (மலையாளிகளையும் சேர்த்து 8,000-த்திற்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் பணியில் உள்ளனர்.) என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

மாற்று அரசியலை உருவாக்குங்கள் என்ற தமிழருவி மணியனின் ஆசை நிறைவேற தமிழகத்தில் இன்னும் காலம் கனியவில்லை என்றே தோன்றுகிறது. பேரா.ம.லெ.தங்கப்பா அவர்களின் நேர்காணல், இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டியது. தற்கால தமிழனின் நிலையை தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் தனக்கென ஒரு நாடு தேவை என்பதை உணர வேண்டும் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தது சிறப்பாகவே இருந்தது.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் (ஏ.டி.எம்.) சேவையும், மோசடியும் என்ற கட்டுரை இதுவரை நமக்கு தெரியாத ஒரு முக்கிய செய்தியை உணர்த்தியுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் மின்சார பொய்களை ப.நற்றமிழனின் கட்டுரை விளக்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள மற்ற கட்டுரைகளும், பெட்டி செய்திகளும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.

தமிழர் நாடு தரணியெங்கும் செல்ல வேண்டும். தமிழர் நலம் பேண வேண்டும்.


ஆசிரியர்; முருகு.இராசாங்கம்

தொடர்புக்கு; எசு-9, மருத்துவர்கள் குடியிருப்பு,
பூ.சா.கோ. மருத்துவமனை வளாகம்,
பீளமேடு, கோயம்புத்தூர் - 641 004.
மின்னஞ்சல்; thamizharnadu@yahoo.com

நன்கொடை; ரூ.10.00 மட்டும்.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/777-2012-03-26-09-19-51

No comments: