Friday, July 25, 2008

பனிக்குடம்

சிற்றிதழ் அறிமுகம்: பனிக்குடம்

பெண்ணின் அடையாளம் எது?
"பனிக்குடம்" கவிஞர் குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். பெயர் பறைசாற்றுவதைப் போல இது பிரத்யேகமான பெண்ணிய இதழ்.""பெண்ணிய மொழிக்கான உச்சரிப்புகளைக் கண்டுபிடித்தலும் பெண்ணியம் ஓர் இயக்கமாக வளர சமன்பாடுகளை ஆக்கும் பெண்ணியக் கவிதைகளைப் படைத்தளித்தலும் பெண்ணியக் கருத்தாக்கத்தை உரையாடலாக்கி, அதிர்ந்து பரவச் செய்தலும் இவ்விதழின் முக்கியமான பணிகள்"" என்கிறார் ரேவதி.பிரமிளின் பிரசுரிக்கப்படாத கவிதை, பாப்லோ நெருடாவின் கவிதை குறித்த பார்வை, ஃபமிதா ரியாஸின் ஐந்து கவிதைகள், சுகிர்தராணியின் கவிதைகள், இரா.கை. சங்கரின் கவிதை என்று உண்மையிலேயே பனிக்குடத்தை வியாபித்திருக்கின்றன கவிதைகள்.அமிர்த ஷெர்கில் மற்றும் புகைப்படக் கலைஞர் டோரதியாலாங் பற்றிய குறிப்புகளும் படங்களும் உள்ளன. குறிப்புகள் மேலோட்டமாக இல்லாமல் விரிவாக இருந்திருக்கலாம்.உமா மகேஸ்வரியின் "வெறும் பொழுது" பற்றிய மாலதியின் விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு வித்தியாசமான தொனியில் இருக்கிறது.கவிதை, கவிதை சார்ந்த பரிமாற்றங்களுமே பத்திரிகையின் உயிர்ச் சரடாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாலும் அதில் பெண்மொழி என்பதைத் தாண்டிய ஒரு தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதும் அவசியம். பெண் என்பவள் உடல் சார்ந்தவள் மட்டுமே இல்லை. ஆனால் காலம் காலமாக அவள் அதுதான் என்று அவளுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்ணியம் அந்தச் சித்தரிப்புகளை உடைத்து வெளிவருவதை விட்டு அதையே அதன் அடையாளமாக, முகவரியாக மாற்றிக்கொள்ள முனைவது அவசியமா?இதழ் வடிவமைப்பிலும் இன்னும் சிறிது கவனம் செலுத்தலாம்.விலை: ரூ. 10, ஆண்டு சந்தா ரூ. 50,
23, அகத்திமுத்தன் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

நன்றி : சிஃபி.காம்

No comments: